மன்னித்துவிடுங்கள் யுவகிருஷ்ணா(லக்கிலுக்) இது உங்களுக்கான பதிவு இல்லை


திரையில் நாம் கவர்ச்சிக் கன்னிகளாக ரசித்தவர்களின் நெஞ்சில் மனிதாபிமானம் ரொம்பவே கொட்டிக் கிடக்கும். அதில் சில உதாரணங்கள் இங்கே....

தன்னை ஆரம்பத்தில் அழைத்துப் போய் சினிமா சான்ஸ் வாங்கிக் கொடுத்த ஒரே காரணத்துக்காக, சாகும் வரை தன் அருகிலேயே தாடி மனிதரை பேணிப் பாதுகாத்து வந்தார், 'சில்க்' ஸ்மிதா!

தனது காதல் கணவன் புத்தி சுவா தீனம் இல்லாமல் போனதும், கவர்ச்சி நடனம் மூலம் கிடைத்த பணத்தை அவரின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்தி, சேவை செய்தவர் நடிகை அனுராதா..!

பெற்ற குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் நேரத்தில் சொத்துபத்து ஏதும் சேர்த்து வைக்காமல் குடும்பத்தையே அம்போ வென்று விட்டுவிட்டு மறைந்தார், நடிகர் ஆனந்தன். எல்லோரையும் பட்டினியிலிருந்து காப்பாற்றி... தங்கை தம்பிகளுக்கு வீடு, கல்யாணம் செய்த பிறகே தனக்கு கல்யாணம் செய்து கொண்டார், 'டிஸ்கோ' சாந்தி..!

இந்நிலையில், 'நோயால் வாடும் தன் அம்மாவை விட்டுவிட்டு கல்யாணம் செய்து கொண்டு போவது சரியா..?' என்று உருகி... திருமணம் வேண்டாமென அம்மாவுக்காகவே வாழ்ந்தவர் ஷகிலா.

ஒரு காலத்தில் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்றவர் களுடன் நடித்து ரசிகர்களை ஒருவழி யாக்கிய ஷகிலா, சீக்கிரமே கல்யாணப் பெண்ணாக வெட்கம் காட்டப் போகிறார்! விஜயகாந்த் கட்சியின் வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளரான சதீஷ்தான் ஷகிலா மணாளர்!

''சினிமாவிலெல்லாம் கல்யாண வீட்லயோ... கோயில் திருவிழாவிலோ காதல் மலரும். எனக்கு எங்கம்மாவின் மறைவின்போதுதான் காதல் வந்தது!'' என்று நெகிழ்ந்த ஷகிலா அதை நெகிழ்ச்சியாக நம்மிடம் விவரித்தார்...

''இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம்னு 200-படத்துக்கு மேல நடிச்சு முடிச்சுட்டேன். எல்லா பொண்ணுங்களை மாதிரி நானும் காலா காலத்துல கல்யாணம் பண்ணி குழந்தைகுட்டியைப் பெத்து அவங்களை ஸ்கூலுக்குக் கூட்டிட்டு போகணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா எனக்கு குடும்பக் கடமைகள் நிறைய இருந்துச்சு... நானே சம்பாதிச்சு தங்கை தம்பியை செட்டில் பண்ண வேண்டிய கட்டாயம். அதனால் எப்போதும் ஷூட்டிங்ல என்னை நானே பிஸியாக்கிக்கிட்டேன். கூடப் பொறந்தவங்களை செட்டில் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு நெனச்சா... அந்த நேரத்துல எங்கம்மா டயாலிசிஸ் பண்ற அளவுக்கு உடம்பு மோசமாகிப் படுத்த படுக்கையாயிட்டாங்க.

அவங்களை காப்பற்ற மறுபடியும் நடிக்க ஓடினேன். இப்படி காலம் கரைஞ்சுக்கிட்டே இருந்தப்பதான் அல்லா என்னிடம் சதீஷை அனுப்பினார். என்னோட தம்பி சலீமுக்கு ஃப்ரெண்ட் அவர். நிறையத் தடவை எங்க வீட்டுக்கு வந்திருக்கார். அப்பவெல்லாம் அவர் மீது காதல் ஈர்ப்பு ஏற்படலை. ஒருதடவை ஷூட்டிங்குக்காக நானும் தம்பியும் துபாய்ல இருந்தோம் அந்தசமயம் பார்த்து, எங்கம்மாவுக்கு ரொம்ப சீரியஸ்! அதை வேலைக்காரவங்க மூலமா கேள்விப்பட்டு ஓடிவந்து சேத்துப்பட்டு ஹாஸ்பிடலில் சேர்த்து அம்மா உயிரைக் காப்பாத்தினார் சதீஷ். மூணு வருஷமா அவர் எனக்கு பழக்கமா இருந்தும் அந்த ஒரு நொடியிலதான் அவர் மீது காதல் ஏற்பட்டுச்சு. ஆனா அதை வெளியே காட்டிக்கலை. நோய் அதிகமாகி எங்கம்மா போன வருஷம் ஜூன் மாசம் இறந்துட்டாங்க. அப்பவும் சதீஷ் கூடவே இருந்து எல்லாக் காரியத்தையும் கவனிச்சார்.

சதீஷோட அம்மாவுக்கு என்மேல ரொம்பப் பிரியம். ரம்ஜான், பக்ரீத் வந்தா சதீஷ் அம்மா போன் பண்ணி வாழ்த்துவாங்க. அதனால எங்க கல்யாண சமாசாரத்தை சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க. சதீஷ் வீட்டிலேயே சிம்பிளா எங்க நிச்சயதார்த்தம் நடந்தது. எங்கம்மா இறந்து இன்னும் ஒரு வருஷம் ஆகலை. அதனால ஆறு மாசத்துக்கு அப்புறமா கல்யாணத்தை வெச்சிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்...'' என்ற ஷகிலாவிடம், ''கல்யாணம் யார் தலைமையில்?" என்று கேட்டோம்.

''நிச்சயமா கேப்டன் விஜயகாந்த் தலைமையில்தான்! மணமகள் நான்தான்னு முடிவாகுறதுக்கு ரொம்ப முன்னாடியே இதை சதீஷ் தீர்மானிச்சிட்டார். இதை அவரோட நண்பர்கள் கிட்டயும் சொல்லியிருக்கார். கேப்டன்கிட்டே தேதி கேட்டிருக்கோம். 'இது வரைக்கும் நீ நடிச்சது போதும் இனிமே சினிமாவுல நடிக்க வேணாம்'னு சொல்லிட்டார் சதீஷ். இப்போ நடிச்சிட்டிருக்கற எல்லாப் படத்துலயும் குணச்சித்திர காமெடி ரோல்தான் பண்றேன். இதையும் சதீஷ்கிட்ட சொல்லிட்டேன். திரும்பவும் நடிக்கற அவசியம் ஏற்பட்டா, காரெக்டரைப் பத்தி சதீஷ்கிட்ட விலாவாரியா சொல்லிட்டு நடிப்பேன்...'' என்றார் ஷகிலா!

இஸ்லாமியர் இவர்... சதீஷ் இந்து. கல்யாணம் என்னவோ 'டும்டும்' கொட்டி இந்து முறைப் படிதானாம்!